முகப்பு
திருச்சி

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக் காவல் பிரிவு தொடங்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி, செப்.25:  திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்தைச் சீர் செய்ய விரைவில் போக்குவரத்து காவல் பிரிவைத் தொடங்க வேண்டும் என்கின்றனர் இந்த நகர மக்கள்.   திருவாரூர் மாவட்டத்தில் வளர்ந்து வ

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:40 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி, செப்.25:  திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்தைச் சீர் செய்ய விரைவில் போக்குவரத்து காவல் பிரிவைத் தொடங்க வேண்டும் என்கின்றனர் இந்த நகர மக்கள்.

  திருவாரூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சிகளில் திருத்துறைப்பூண்டியும் ஒன்று. வேதாரண்யத்திலிருந்து தஞ்சை, திருச்சி, திருவாரூர், மன்னார்குடி செல்லவும், நாகையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த ஊர் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

  மேலும், தென் மாவட்டங்களிலிருந்து வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஊர் வழியாகத்தான் வந்து செல்கின்றனர். வேதாரண்யம் பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டதாலும், புறவழிச்சாலை ஏதும் இல்லாததாலும் உப்பு, சவுக்கு, சிலிகேட் மணல் லாரிகள் இந்த நகரின் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.

  இவ்வாறு நாளுக்கு நாள் நகரில் பெருகிவரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு சில சாலைகளின் வழியாக ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், நகரில் வாகனங்களைக் காண்காணிக்க போக்குவரத்துக் காவலர்கள் இல்லை. இதற்கு திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஊரகக் காவல் நிலையம் இல்லாததும், நகரக் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

   15 ஆண்டுகளுக்கு முன் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்தபோது, கீழத் தஞ்சை மாவட்டக் காவல் தலைமையகமாக நாகப்பட்டினம் செயல்பட்டது. அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து வாரத்திற்கு இரு நாள்கள், ஒரு போக்குவரத்து காவல் துணை ஆய்வாளரும், தலைமைக் காவலரும் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை தவிர, 6 நாள்கள் இந்நகரில் பாக்குவரத்தை ஒழுங்கு செய்துவந்தனர்.

   பின்னர், திருவாரூர் மாவட்டம் தனியாகப் பிரிந்தவுடன், ஆயுதக் காவல் படைப் பிரிவில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் போக்குவரத்தைச் சீர் செய்தனர். ஆனால், அந்தப் பிரிவில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் திருவாரூரில் ஆயுதக் காவல் படைப் பிரிவில் பணியிலிருந்தபோது, ஒரு காவலருக்கு விடுமுறை அளிக்காத காரணத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

   அதன் பின்னர், 8 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக் காவல் பிரிவே இல்லாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது இந்த நகரம்.

  மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளும் இதுபற்றி அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்லகளில் இருந்து சில காவலர்களை போக்குரத்துக் காவல் பணிக்கு தாற்காலிகமாக நியமிப்பது உண்டு. ஆனால், அதனால் பலனில்லை; மக்கள் பிரதிநிதிகளும் இந்தப் பிரச்னையை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தாங்கள் பொறுப்பேற்கும்போது திருத்துறைபபூண்டியில் போக்குவரத்துக் காவல் பிரிவு தொடங்கப்படும் என்று கூறுவர். ஆனால், இன்று வரை யாரும் அதைச் செயல்படுத்தவில்லை.

  எனவே, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் விரைவில் இங்கு போக்குவரத்துக் காவல் பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →