கரூர் அரசு மருத்துவமனை விரிவாக்கம் : நீதிமன்றக் கட்டடம் பயன்படுத்தப்படுமா?
கரூர், ஏப். 25: கரூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை விரிவாக்கப் பணிக்காக வேறிடத்திற்கு மாற்றப்பட்ட நீதிமன்றக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த
கரூர், ஏப். 25: கரூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை விரிவாக்கப் பணிக்காக வேறிடத்திற்கு மாற்றப்பட்ட நீதிமன்றக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் 2 ஏக்கரில் இயங்கி வருகிறது. இதில் பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மகப்பேறு, மகளிர் நலம், விபத்து, அவசரச் சிகிச்சை, எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, காசநோய், எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு, பால்வினை நோய் பிரிவு, ஸ்கேனிங் மையம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
300 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 2 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு 35 மருத்துவர்களும், சுமார் 150 மருத்துவப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.
எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையானது போதிய இடவசதி இல்லாமல் தவித்து வருகிறது. குறிப்பாக, நோயாளிகளைப் பார்க்க வருவோர், மருத்துவமனைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோரின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை.
மேலும், மருத்துவமனையின் உள்ளே செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவால், இதர நோயாளிகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுவதால், இந்தப் பிரிவை தனியிடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதன்மூலம், படுக்கையிலிருந்து சிகிச்சை பெறும் இதர நோயாளிகளுக்கும், மகப்பேறு பகுதியிலுள்ள பெண்களுக்கும் நிம்மதியான சூழலை உருவாக்க இயலும் என்கின்றனர் அவர்கள்.
பொதுவாக, அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையை ஒட்டி, சாலையின் அருகில் இருந்தால்தான், அவசரச் சிகிச்சைக்கு வருவோருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க முடியும்.
இதற்காக, அரசு மருத்துவமனை அருகிலுள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்திலோ அல்லது மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ இடம் ஒதுக்க வேண்டுமென மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் 1998 - லிருந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மற்ற சமுதாய அமைப்புகளும் இந்த பிரச்னையில் கோரிக்கை விடுத்து வந்தபோதும், உரிய நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், மருத்துவ உபகரணங்களுக்காக ரூ. 4.8 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பகுதியை புதிதாகக் கட்டிக் கொள்ள ரூ. 65 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் கட்டத் தேவையான 35 சென்ட் இடம் கிடைக்காததால், இந்தப் பணி கிடப்பில் உள்ளது. இதற்கான கோப்புகள் சென்னையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மருத்துவமனையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பும், இட வசதியும் கிடைத்துள்ளது.
கரூரில் இயங்கி வந்த நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 10.75 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு கடந்த பிப்ரவரியில் மாற்றப்பட்டன.
இந்தக் கட்டடத்தில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தையோ அல்லது அருகில் செயல்பட்டு வரும் பொதுப்பணித் துறை அலுவலகக் கட்டடத்தையோ மாற்றலாம். இதன் மூலம் கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக சுமார் ஒர் ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையிலான இடம் கிடைக்கும்.
நீதிமன்றம் இயங்கி வந்த கட்டடமானது ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமாக இருந்தபோதிலும், நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் மாநில அரசு நிர்வாகம் இதைப் பெற்றுள்ளது.
இதனால், சுமார் 45 ஆண்டுகள் இயங்கி வந்த நீதிமன்ற வளாகம் மாற்றப்பட்டதால், ஒப்பந்த அடிப்படையில் அந்தக் கட்டடம் மாநில அரசிடமே தொடர்கிறது.
அதில் தற்போது நிலுவையிலுள்ள விபத்து, அவசரச் சிகிச்சை மையத்தை அமைப்பதோடு, வரும் காலங்களில் கரூரில் மருத்துவக் கல்லூரி வந்தாலும் இந்தக் கூடுதல் இடம் கண்டிப்பாக இடத் தேவையை நிறைவு செய்யும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்போது, கரூர் மாவட்ட மக்களுக்கான மருத்துவச் சேவை மேம்படுவதோடு, எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கனவும் நிறைவேற வாய்ப்புள்ளது.
இதைத் தற்போதைய நிலையில் மாவட்ட ஆட்சியரும், எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.