திருச்சி

திருமானூரில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

அரியலூர், டிச .29: அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி, திருமானூரில் அரசுக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட

கு. வைத்திலிங்கம்

அரியலூர், டிச .29: அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி, திருமானூரில் அரசுக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

   அரியலூர் மாவட்டத்தின் முக்கியமான ஒன்றியங்களில் திருமானூரும் ஒன்று. இந்தப் பகுதியில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்தக் கிராம ஊராட்சிகளின் கீழ், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருமானூர் ஒன்றியத்தின் ஒரு பகுதியை திருச்சி மாவட்டமும், மற்றொரு பகுதியை தஞ்சாவூர் மாவட்டமும் இணைக்கின்றன.

   நந்தி திருக்கல்யாணம் நடைபெறும் திருமழப்பாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயில், திருமானூர் கைலாசநாதர் கோயில், ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு புகழ்மிக்க ஆன்மிகத் தலங்கள் இந்த ஒன்றியப் பகுதியில்தான் அமைந்துள்ளன.

   மேலும், அரியலூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கரைவெட்டியும் இந்தப் பகுதியில்தான் உள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் இருந்தும், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில வேண்டும் என்றால் பல மைல் தொலைவிலுள்ள அரியலூருக்கோ, பெரம்பலூருக்கோ அல்லது தஞ்சை, திருச்சி போன்ற பிற மாவட்டங்களுக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவர்களுக்கு கால விரயமும், பொருள் விரயமும் ஏற்படுகிறது.

   திருமானூர் ஒன்றியத்தின் கடைப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், உயர் கல்விக்காக பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அவர்கள் குறைந்தது 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை காலையிலும், மாலையிலும் பேருந்தில் பயணம் செய்துதான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

  இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவர் வழக்ககுரைஞர் வீ. முத்துக்குமரன் கூறியது:

   மாணவ, மாணவிகள், பிற மாவட்டங்களுக்குச் சென்று கல்வி பயிலும் நிலையை மாற்ற திருமானூரில் அரசுக் கல்லூரியைத் தொடங்குவதுதான் தீர்வாகும். கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத் தேர்விலும், எஸ்எஸ்எல்சி தேர்விலும் திருமானூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மேல்நிலைப் பள்ளிகள் நல்ல தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்று வருகின்றன.   இவ்வாறு மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் நல்ல நிலையில் இருக்கும் போது, அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமை என்றார் அவர்.  கடந்த 1996- 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாளை து. அமரமூர்த்தி, 2001- 2006 வரை அதிமுகவைச் சேர்ந்த ப. இளவழகன், தற்போது அதிமுகவைச் சேர்ந்த துரை. மணிவேல் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே திருமானூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருந்தும், திருமானூர் பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.

  எனவே, தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், தங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வியில் மேம்பாடு அடையும் வகையில், திருமானூர் பகுதியில் அரசுக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT