கேள்விக்குறியாகும் "நலமான தமிழகம்' திட்டம்
ஆலங்குடி டிச. 31: தமிழக அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "நலமான தமிழகம் திட்டம்' போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கேள்விக்குறியாகியுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நலனை மேம்படுத்த
ஆலங்குடி டிச. 31: தமிழக அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "நலமான தமிழகம் திட்டம்' போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கேள்விக்குறியாகியுள்ளது.
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் - 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் - வீடு தேடிச் சென்று சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதா எனப் பரிசோதித்து அவர்களுக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கும் நோக்கில் "நலமான தமிழகம் திட்டம்' தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடிப்படையில் இது ஒரு நல்ல திட்டம். ஆனால், முன்திட்டமிடலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால் திட்டச் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.
உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ. 29-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை அனைத்துக் கிராமங்களிலும் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு அந்தந்தப் பகுதியில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் மூலம் முதல் கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, டிச. 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலுள்ள கிராம சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் மூலம் இரண்டாம் கட்டப் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இந்தப் பரிசோதனை "குளுக்கோ மீட்டர்' என்ற சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரு பரிசோதனைகளிலும் நோய்க்கூறுகள் கண்டறியப்பட்டோர் வாரத்தில் ஒரு நாள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துகொண்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி "ஆட்டோ அனலைசர்' என்ற கருவி மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தக் கருவி பல இடங்களில் இல்லை.
உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் உள்ள 28 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏறத்தாழ 20 நிலையங்களில் இந்தக் கருவி இல்லை என்று தெரியவருகிறது.
இதேபோல, இரண்டாம் கட்ட பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் "குளுக்கோமீட்டர்' சாதனத்தில் பயன்படுத்தப்படும் "ஸ்ட்ரிப்'களும் போதிய அளவு இல்லாததால், இந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட பரிசோதனையே தடைபட்டுள்ளது.
இதனால், அரசு நல்ல நோக்குடன் தொடங்கிய ஒரு திட்டம் அதன் பயனை எட்ட முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது: "எந்த ஒரு திட்டத்தையும் யதார்த்த சூழலை உணர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிவிட்டு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதி நேரம் மூடியே கிடக்கின்றன; திறந்திருந்தாலும் சிகிச்சை அளிக்க யாரும் இருப்பதில்லை.
இந்நிலையில், வெறுமனே திட்டத்தை மட்டும் அறிவிப்பதால் யாருக்குப் பயன்? இது ஒரு நல்ல திட்டம். ஆனால், அதற்கேற்ற கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்'' என்றார் அவர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவே.