மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணம் பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள், கருவிகள் பெற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். விஜயக்குமார். இதுகுறித்து அவர் வெளியி
பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள், கருவிகள் பெற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். விஜயக்குமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில், 2010- 11-ம் நிதி ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெரம்பலூர், வரகூர் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, நடை உபகரணங்கள், பிளாஸ்டிக், உலோகத்தால் ஆன காலிபர், ஊன்றுகோல் வழங்கப்படவுள்ளன.
விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால், பார்வை இழந்தவர்களுக்கு கறுப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், ஆண், பெண் இருபாலருக்கும் பிரெய்லி கைக் கடிகாரம், பேசும் மின்னணு கைக் கடிகாரம், காதொலிக் கருவிகள், எலெக்ட்ரிக் ரீசார்ஜ் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
இந்த உபகரணங்கள் தேவைப்படும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர்- 621212 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜன.10-ம் தேதிக்குள், தேசிய அடையாள அட்டை நகல், இரண்டு புகைப்படங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர்.