முகப்பு
திருச்சி

பாபநாசம் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

தஞ்சாவூர், ஜன. 25: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் பாபநாசம் பகுதி மக்கள்.  திருவாரூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 6 ஊராட்சிகளை மீண்டும் பாபநாசம் வட்டத்திலே

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:36 AM
பகிர்:

தஞ்சாவூர், ஜன. 25: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் பாபநாசம் பகுதி மக்கள்.

 திருவாரூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 6 ஊராட்சிகளை மீண்டும் பாபநாசம் வட்டத்திலேயே சேர்க்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைத் தமிழக அரசு நிறைவேற்றாததால், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்க பாபநாசம் பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

 தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருந்த அன்னுக்குடி, உத்தமதானபுரம், நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, மதகரம், மணலூர் ஆகிய 6 ஊராட்சிகள் 1996 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.

Advertisement

 இந்த 6 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் சொத்துப் பதிவு, வருவாய்ப் பதிவு, பிறப்பு, இறப்புப் பதிவு, நில வருவாய்ப் பதிவு, நீதிமன்றம், காவல் நிலையம் என அனைத்துப் பணிகளையும் பாபநாசத்திலேயே நிறைவேற்றிக் கொண்டனர்.

ஆனால், அந்த ஊராட்சிகள் திருவாரூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட பிறகு, அனைத்துப் பணிகளுக்கும் சுமார் 40 கி.மீ. தொலைவுள்ள திருவாரூர் நகரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பிரிக்கப்பட்ட 6 ஊராட்சிகளையும் மீண்டும் பாபநாசம் வட்டத்திலேயே இணைக்க வேண்டுமென பல்வேறு அறப் போராட்டங்களை நடத்தி, தங்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட (அப்போதைய) 6 ஊராட்சித் தலைவர்களும் முறையீட்டு மனு மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 7.8.2003-ல் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த 6 ஊராட்சிகளையும் மீண்டும் பாபநாசம் வட்டத்திலேயே இணைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 ஆனால், இதுவரை பாபநாசம் வட்டத்தில் அந்த ஊராட்சிகள் இணைக்கப்படவில்லை. இதனால், அந்த ஊராட்சிகளைச் சேர்ந்தோர் தங்களுடைய ஜனநாயகக் கடமையைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, மேற்கூறிய ஊராட்சி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.