திருச்சி

கழிவு நீர் கலந்து வரும் உய்யகொண்டான் வாய்க்கால்

திருவெறும்பூர், மார்ச் 2: உய்யகொண்டான் வாய்க்கால் தண்ணீரில் கழிவுகளும், கழிவு நீரும் கலப்பதைத்  தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.    கரூர் மாவ

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், மார்ச் 2: உய்யகொண்டான் வாய்க்கால் தண்ணீரில் கழிவுகளும், கழிவு நீரும் கலப்பதைத்  தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில்  உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி, தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது.

   குளித்தலை வரையில் தெளிவாக வரும் உய்யகொண்டான், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் அதில் கழிவுநீர் கலக்க ஆரம்பித்துவிடுகிறது. சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில் கலக்கிறது. தொடர்ந்து, திருச்சி நகரத்தின் பெரும்பாலான சாக்கடைகள், அரசு மருத்துவமனைக் கழிவுகள் உள்ளிட்டவை கலந்து, செந்தண்ணீர்புரம் வரும் அந்தக் கால்வாய் நீரில் அந்தப் பகுதியில் உள்ள எரிசாராயத் தொழில்சாலை ரசாயனக் கழிவுகள், செம்பட்டு, குண்டூர் பகுதியில் உள்ள தோல் தொழில்சாலை கழிவுகள் ஆகியன நத்தமாடிப்பட்டி அருகேயும், திருவளர்ச்சிப்பட்டி அருகேயும் கலக்கின்றன. இதுமட்டுமல்லாது, பெல் நிறுவனக்  கழிவுகள் நவல்பட்டு புதுத் தெரு அருகே கலக்கின்றன.

  சாக்கடைநீர், தொழில்சாலைகளின் கழிவுகள் கலப்பதன் காரணமாக, மாசு அடையும் உய்யகொண்டான், இந்தப் பகுதியல் கறுப்பு நிற வாய்க்காலாகவே ஓடுகிறது. இதனால், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. மேலும், இந்த நீரை  பயன்படுத்தும்போது மனிதர்களுக்கும்,  கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், அந்த வாய்க்கால் தண்ணீரை விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

   இதைத் தடுக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  அப்போதைய கோட்டாட்சியர் சிவராஜ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொழில்சாலைகள் தங்களின் கழிவுகளை உய்யகொண்டான் ஆற்றில் கலக்கக் கூடாது; சுத்திகரிப்பு இயந்திரங்களை தொழில்சாலைக்குள்ளேயே அமைத்து, கழிவுநீரைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்றும், ரசாயனக் கழிவுகளைச்   சுத்திகரித்து லாரிகள் மூலம் மணிகண்டம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, இந்தப் பகுதியில் உள்ள எரிசாராயத் தொழில்சாலைகள் சிறிதுகாலம் இயங்காமல் இருந்து வந்தன. இந்நிலையில், அவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. கழிவுநீரும் ஆற்றில் கலக்கப்படுகின்றன.     இதேபோல, பெல் நிறுவனத்தினருடனும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் கழிவுநீரை நிறுவனத்தின் உள்ளேயே சுத்திகரிப்பு செய்து கொள்வது, கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இருக்க 150 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டு, இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், எழுப்பிய தடுப்புச் சுவரை அவ்வப்போது திறந்துவிட்டு மீண்டும் கழிவு நீரை நிறுவனத்தார் வாய்க்கால் தண்ணீரில் கலந்துவிடுவதாகப்  பொதுமக்கள் கூறுகின்றனர்.

   இதுகுறித்து விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். நடராஜன் கூறியது:

     கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உய்யகொண்டான் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பல்வேறு கழிவுகளும் கலந்ததன் காரணமாக, தற்போது மக்கள் அந்த நீரைப் பயன்படுத்தாமல் உள்ளனர். ரசாயனக் கழிவுகள் கலப்பதால் விவசாயத்திலும், நிலத்தடி நீரிலும் பெரும் பாதிப்பும், மாசு சீர்கேடும் ஏற்பட்டு வருகின்றன.

   இதைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடைபெற்று தீர்வும் காணப்பட்டது. ஆனால், அந்த விதிகளை சிலகாலம் மட்டுமே பின்பற்றி வந்த தொழில்சாலைகள், தற்போது அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.   இதுகுறித்து மாவட்ட நிர்வாகமோ, சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி, போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

   சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியது:

   கழிவுநீரை  தொழில்சாலைகளே சுத்திகரிப்பு  செய்து கொள்ள வேண்டும் என்றும், வாய்க்கால் தண்ணீரில் கலக்கக் கூடாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கழிவுநீரை வாய்க்கால் தண்ணீரில் கலக்கும் தொழில்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அவர்கள்.

   கழிவுநீர் கலப்பதால் நிலமும், நிலத்தடி நீரும் மாசடைவதன் காரணமாக, பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்போதாவது விழித்துக் கொண்டு,  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT