மந்தகதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி
கரூர், மே 5: கரூர் நகராட்சிப் பகுதிகளில் இருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டம், மந்தகதியில் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. 36 வார்டுகளை கொண்ட கரூர்
கரூர், மே 5: கரூர் நகராட்சிப் பகுதிகளில் இருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டம், மந்தகதியில் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
36 வார்டுகளை கொண்ட கரூர் நகராட்சியில் சுமார் 20 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு நிரந்தரமாக 80 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில், தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியூர்களிலிருந்து வந்து செல்கின்றனர்.
இதனால், நகராட்சியில் ஒரு நாளைக்கு 60-65 டன் குப்பைகள் சேர்கின்றன. இவற்றை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் லாரிகள் மூலமாக அகற்றுகின்றனர்.
இந்தக் குப்பைகள் நகராட்சியின் ஒதுக்குப்புறத்திலுள்ள அரசு காலனிப் பகுதியில் சுமார் 21 ஏக்கரிலுள்ள காலியிடத்தில் கொட்டப்பட்டு, எரித்து அழிக்கப்பட்டன.
இதனால் புகையும், சுற்றுப்புறச் சூழல் பாதிப்பும், விபத்துகளும் ஏற்பட்டன.
மேலும், குப்பைகளுடன் சேர்ந்து வரும் மாமிசக் கழிவுகளால் அப்பகுதியில் ஈக்களின் தொல்லையும் அதிகரித்தது. எனவே, இந்தப் பகுதியில் குப்பைகளை எரிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், குப்பைகளைக் கையாள்வதில் மாற்று வழி தேட வேண்டிய கட்டாயம் நகராட்சிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், குப்பையிலிருந்து கலவை உரம் தயாரிக்கலாம் என்ற திட்டம் நகராட்சிக்குக் கிடைத்தவுடன், அதைச் செயல்படுத்தத் தொடங்கியது.
இதற்காக நகராட்சிக்குச் சொந்தமான 21 ஏக்கரில் ரூ. 90 லட்சத்தில் உரம் தயாரிப்பதற்கான பணிகளைச் செய்ய ஏப்ரல் 2010-ல் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், களம் அமைத்து மக்கும் குப்பைகளைச் சேகரித்து, சாண நீர் தெளித்து 90 நாள்களில் உரமாக மாற்றுவது என்றும், இதற்குத் தேவையான நீரை அருகிலுள்ள புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மக்கும், மக்காத குப்பைகளைத் தனித் தனியாகப் பிரித்துச் சேகரிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டுக்கும் சிவப்பு, பச்சை வண்ண வாளிகள் வழங்கப்பட்டன. நகராட்சி குப்பை லாரிகளிலும் தனித்தனியாகக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
ஆனால், இந்த நடைமுறை நாளடைவில் குறையத் தொடங்கி, தற்போது அனைத்துக் குப்பைகளும் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுகின்றன.
குப்பை சேகரிக்கப்பட்டுள்ள அரசு காலனியிலும் போதுமான பணிகள் நடைபெறாமல், வழக்கமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டு, தீயிட்டு அழிக்கப்படுகின்றன. இதனால், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், பணிகளில் உரிய வேகம் இல்லாததால் உரம் தயாரிக்கும் பணி மந்தமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து நகராட்சி நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார் கூறியது:
நகராட்சியில் தினமும் 60 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் சுமார் 5 டன் குப்பையானது காமராஜ் சந்தை, உழவர் சந்தைப் பகுதிகளிருந்து கிடைக்கிறது.
எனவே, இவற்றை உரம் தயாரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். மற்ற வகைகளில் 15 டன் மக்காத குப்பையும், மறுசுழற்சி செய்ய முடியாத 3 டன் குப்பையும், 37 டன் மண்ணும் கிடைக்கிறது.
உரம் தயாரிக்கப் போதுமான அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. இவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக, சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
குப்பைகளைப் பெறும் இடத்திலேயே தரம் பிரிக்கப்பட்டால்தான் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறும்.
எனவே, இதில் மக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எனினும், துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளித்து, உரம் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றார் அவர்.