பரவசமூட்டும் பல வகையான பட்டாசு ரகங்கள்...
இந்தியாவில் பல மாநிலங்களில் வெவ்வெறு பண்டிகைகள் பிரபலமாகக் கொண்டாடப்பட்டாலும், தீபாவளிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், ஓரே நாளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் தீப
இந்தியாவில் பல மாநிலங்களில் வெவ்வெறு பண்டிகைகள் பிரபலமாகக் கொண்டாடப்பட்டாலும், தீபாவளிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், ஓரே நாளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் தீபாவளிப் பண்டிகையை மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். மனிதனுக்கு தினசரி வாழ்கையில் பல பிரச்னைகள் வருகிறது. அந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பதில் ஒரு நாளில் பெரும் பகுதி சென்று விடுகிறது. வீட்டு விசேஷம் மற்றும் பண்டிகைகளை, உறவினர்களுடனும், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டி மன இறுக்கத்திலிலிருந்து வெளிவர வேண்டும் என நமது முன்னோர்கள் எண்ணியே இதுபோல பல பண்டிகைகளையும், இதனைக் கொண்டாடும் முறைகளையும் வழிவகுத்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு என மூன்றும்தான் அனைவரின் ஞாபகத்துக்கு வரும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால்தான் தீபாவளியை முழுமையாகக் கொண்டாடிய திருப்தி வரும். பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பட்டாசு வெடிக்காத தீபாவளியை தற்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பதை விரும்புகின்றனர். பிரிக்க முடியாதது எதுவோ என்ற வரிசையில் தீபாவளியும், பட்டாசும் என தைரியமாகக் கூறலாம்.
Advertisement
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் இந்தியத் தேவையில் 80 சதம் பூர்த்தி செய்கின்றன. சிவகாசி பகுதியில் சுமார் 650 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 60 சதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிப் பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்த, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை அதிபர்கள், ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர்.
அந்த ஆய்வுக் கூடங்களில் புதிய ரக பட்டாசு குறித்து ஆய்வு நடைபெறும்.
பின்னர் வித்தியாசமான புதிய புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்களது ஏஜென்டுகளை வெளி மாநிலங்களுக்கு பட்டாசு ஆர்டர் பெற அனுப்பி வைப்பார்கள்.ஜூன் மாதம் முதல் வெளிமாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி தொடங்கும்.
சிவகாசியில் சுமார் 250 ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சரவெடி, அணுகுண்டு, லெட்சுமிவெடி, டூ இன் ஒன், கம்பி மத்தாப்பு, குச்சி மத்தாப்பூ, பூச்சட்டி, தரைச் சக்கரம், பென்சில், ரோல் கேப் என பல்வேறு ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சமீப காலமாக விண்ணில் சென்று பல வண்ணங்களில் ஒளிகளைச் சிந்தும் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகின்றன. இவை சுமார் 100 மீட்டர் உயரம் சென்று வெடித்து நட்சத்திரங்களைப் போல சிதறுவது பார்க்கப் பரவசமூட்டும். சரவெடிப் பட்டாசை அனைவரும் விரும்புவார்கள். பத்தாயிரம்வாலா சரவெடி பட்டாசு பற்றவைத்த பின்னர் சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும்.
கம்பி மத்தாப்பு, குச்சி மத்தாப்பு, சாட்டை உள்ளிட்டவற்றை குழந்தைகள் விரும்புவார்கள். கம்பி மத்தாப்பில், கைப்பிடிக்க வசதியாக நீளமான கம்பி இருப்பலதால் குழந்தைகள் இவற்றை விரும்புகின்றனர்.
தற்போது இதில் சிகப்பு, பச்சை, மஞ்சள், சில்வர் என பல வண்ணங்கள் உள்ளன. இவை தவிர பாராசூட், ரயில் போன்ற பேன்சி ரக பட்டாசுகளும் உள்ளன.
தீபாவளிப் பண்டிகைக்கு சுமார் ஒரு மாத காலத்துக்கு முன் பட்டாசுக் கடைகளில் விற்பனைத் தொடங்குகிறது. ஆயுத பூஜை முடிந்ததும் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும். தீபாவளி தினத்துக்கு முன்தினம் இரவு வரை விறுவிறுப்பாக பட்டாசு வியாபாரம் நடைபெறும்.
இதுகுறித்து சிவகாசி ஸ்டேண்டர்டு பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செ.சுபாஷ்சிங் கூறியது:
சிவகாசியில் பிரதானமான தொழில் பட்டாசுத் தொழில். இந்தத் தொழில் இங்கு நடைபெறுவதால் சிவகாசி என்ற பெயர் உலகுக்க்கு அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில் இங்குள்ள உரிமையாளர்களின் முயற்சியாலும், தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் சிறப்பாக இயங்கி வருகிறது. பட்டாசு முழுக்க முழுக்க கையினால் தயாரிக்கப்படுவதால், இங்குள்ள பெண்கள் வீடுகளில் இருந்து கொண்டே பெட்டி ஒட்டுவது உள்ளிட்ட பணிகளைச் செய்து கொண்டே பணம் சம்பாதித்து தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். இதனால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு ஆகும். பாதுகாப்பாக பட்டாசை வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றார் சுபாஷ்சிங்.