முகப்பு
திருச்சி

துறையூரைத் தக்கவைக்குமா திமுக?

துறையூர், அக். 16: திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகர்மன்றத் தலைவர் பதவியைத் தொடர்ந்து தக்கவைப்பதற்காக தீவிரமாகக் களமிறங்கி வாக்குகளைச் சேகரித்து வருகிறது திமுக.     1970-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:27 AM
பகிர்:

துறையூர், அக். 16: திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகர்மன்றத் தலைவர் பதவியைத் தொடர்ந்து தக்கவைப்பதற்காக தீவிரமாகக் களமிறங்கி வாக்குகளைச் சேகரித்து வருகிறது திமுக.

    1970-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தொடங்கி, தற்போது தேர்வு நிலை நகராட்சி என்ற அந்தஸ்தை எட்டினாலும்கூட, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நகர மக்களிடையே நிலவுகிறது.

   போதிய வருவாயின்மை, துப்புரவு, பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ஆள் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.   எந்தத் தேர்தல் வந்தாலும் நகர மக்களுக்கு கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் இன்னும் அப்படியே மாறாமல் உள்ளன.    2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் துறையூர் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.

Advertisement

   இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நகர்மன்றத் தலைவர் பதவிக்காக திமுக மாவட்டப் பிரதிநிதி என். முரளி, காங்கிரஸ் நகரத் தலைவர் மு. ஆதித்தன்ராஜன், தேமுதிக மாவட்டப் பொருளாளர் ம. பாபு ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

   அதிமுக நகர அவைத் தலைவர் வி. ரவிவர்மா, மதிமுக நகரச் செயலர் அ. பிச்சை ரத்தினம், பாமக ப. பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்கின்றனர்.

   இவர்கள் தவிர, முன்னாள் திமுக கொறடா து.ப. அழகமுத்து மகள் மோ. மாலதியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ச. அஞ்சலி தேவியும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர். என்றாலும், திமுக - அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

   இந்த முறையும் வெற்றி பெற்று துறையூர் நகர்மன்றத் தலைவர் பதவியைத் தக்க வைப்பதற்காக திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  அதிமுக தாங்கள் செய்த, செய்யப்போகும் சாதனைகளையும் தொகுத்துத் கூறி வெற்றிக்காக முழு வீச்சில் செயல்படுகின்றனர்.

   காங்கிரஸ் வேட்பாளர் மு. ஆதித்தன்ராஜன் மளிகைக் கடை வியாபாரிகள் சங்க நிர்வாகியாகவும், கடந்த முறை 22-வது வார்டு உறுப்பினராகவும் இருந்ததால், கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட அணுகுமுறை தனக்குச் சாதகமான வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசின் சாதனைகளையும் விளக்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.     தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்ற அளவில் மக்கள் மத்தியில் சென்று வருகின்றன.

   நகர வருவாயில் 49 சதத்திற்கும் மேல் ஊதியம் வழங்கக் கூடாது என்ற விதிமுறை காரணமாக, காலிப் பணியிடங்களைக்கூட நிரப்ப முடியவில்லை. எனவே, நகராட்சி வருவாயைப் பெருக்கி, தேவையான பணியாளர்களை நியமித்தால்தான் மக்கள் பணிகளை நிறைவு செய்ய இயலும்.

   மேலும் சீரான குடிநீர் வசதி, புதை சாக்கடைத் திட்டம், பேருந்து நிலையப் பராமரிப்பு, குடிநீருக்காக சேதப்படுத்தப்பட்ட புதிய சாலைகளைச் சீர் செய்வது, நகராட்சி மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட பிரச்னைகள் புதிதாக அமையப் போகும் நகர மன்றத்துக்கு சவாலாக இருக்கும்.

   இவற்றுக்குத் தீர்வு காணப்போகும் சரியான தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.