சம்பா சாகுபடிக்கான அரசு சலுகைகள் கிடைக்குமா?
திருச்சி, ஆக. 27: நிகழாண்டில் சம்பா சாகுபடிக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் மற்றும் மானிய உதவிகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. நிகழாண்டில்
திருச்சி, ஆக. 27: நிகழாண்டில் சம்பா சாகுபடிக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் மற்றும் மானிய உதவிகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நிகழாண்டில் மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், குறுவை சாகுபடி பம்புசெட் வசதியுள்ள இடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருபோக சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு செப். 17-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமென அறிவித்துள்ளது.
Advertisement
மேலும், நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு நிலத்தை உழவு செய்ய ஏக்கருக்கு ரூ. 240 மானியம் வழங்க (ஒரு லட்சம் ஏக்கர்) ரூ. 2.40 கோடியும், முதல் கட்டமாக 10,000 ஏக்கரில் சமுதாய நாற்றாங்கால் அமைக்க ரூ. 19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது. அதோடு, உரம், களைக்கொல்லி, புதிய வேளாண் கருவிகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 53.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளும், சம்பா சாகுபடி செய்ய முன்வருவார்கள் என்பதால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏறத்தாழ 11 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களின் வாடகையில் 50% மானியம் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.
இந்தத் துறையில் தற்போது மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து ஏறத்தாழ 55 டிராக்டர்கள் உள்ளன. இவற்றால், டெல்டா முழுமைக்கும் ஒரேநேரத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்ள இயலாது. இதனால், இந்த 50 சதவீத வாடகை மானியத்தை அனைத்து விவசாயிகளும் பெற இயலாத சூழ்நிலைதான் ஏற்படும்.
மேலும், தனியாக நாற்றங்கால் அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியார் டிராக்டர்களை அமர்த்த வேண்டும். இதற்கு ஓர் ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு செய்ய ரூ. 800 வரை வாடகை பெறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில், கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது: வறட்சி என்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதித்துள்ளது. நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கும், சமுதாய நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கும் அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.
அரசு அறிவித்துள்ளபடி நேரடி விதைப்பு ஒரு லட்சம் ஏக்கர், சமுதாய நாற்றங்கால் மூலம் ஒரு லட்சம் ஏக்கர் என 2 லட்சம் ஏக்கருக்குதான் மேற்காணும் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மீதமுள்ள ஏறத்தாழ 9 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களால் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், இதர விவசாயிகளுக்கு உழவுச் செலவு, விதை நெல் ஆகியவற்றை வழங்க அரசு முன்வர வேண்டும்.
இதன்மூலம் அரசுக்கு ஏறத்தாழ ரூ. 160 கோடி வரை கூடுதல் செலவாகும். இருப்பினும், 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படும் போது அதிலிருந்து குறைந்தபட்சம் 16 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படும் வாய்ப்புள்ளது.
மேலும், விவசாயக் கூலித் தொழிலாளர் பற்றாக்குறை உள்ள இக்காலக்கட்டத்தில், சமுதாய நாற்றங்கால் அமைப்பதை பாய் நாற்றங்கால் முறையில் அமைத்தால் நாற்றுப் பறிக்கும் வேலையும், செலவும் இருக்காது.
எனவே, இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, அனைத்து விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடுகளை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்றார்.