மின் வெட்டு நேரம் அதிகரிப்பு; பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு
திருச்சி, பிப். 15: தமிழகத்தில் தற்போது மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், இன்வர்ட்டர்களுக்கான பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த திமுக
திருச்சி, பிப். 15: தமிழகத்தில் தற்போது மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், இன்வர்ட்டர்களுக்கான பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தினந்தோறும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மின் தடைக்கு தீர்வு காணப்படுமென பொதுமக்கள் நம்பினர். ஆனால், தொடர்ந்து மின் தேவை அதிகமானதால், மின் வெட்டு நேரம் இரண்டு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகி, கடந்த 10 தினங்களாக 6 முதல் 8 மணி நேரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
இதனால், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்தைக் கொண்டு செயல்படும் சிறு, பெரு நிறுவனங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளன.
தற்போது திருச்சி மாவட்டத்தில் பகலில் 6 மணி நேரமும், முன்னிரவில் 2 மணி நேரமும் மின்சாரம் சுழற்சி முறையில் நிறுத்தப்படுகிறது. இதனால் வீடுகளில் மின்சாதனப் பொருள்களான கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் சரிவர இயங்கவில்லை என்பது இல்லத்தரசிகளின் ஆதங்கமாக உள்ளது.
குளிர்காலம் முடிந்து தற்போது நல்ல வெயில் அடித்து வரும் நிலையில், காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மின்விசிறி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியவில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையிலேயே இந்த நிலை என்றால், கோடைகாலம் உச்சத்தைத் தொடும்போது இந்த அளவுக்காவது மின்சாரம் கிடைக்குமா எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் வசதியானவர்களது வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இன்வெர்ட்டர் தற்போது நடுத்தர குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. கடந்த 10 தினங்களுக்கும் மேலாக மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், இன்வெர்ட்டர்களின் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் இதனை விற்பனை செய்வோர்.
தற்போது இன்வெர்ட்டர்கள் ஏறத்தாழ 40 முதல் 50 நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவை 500 வார்ட்ஸ் முதல் 800 வார்ட்ஸ் வரையிலான இன்வெர்ட்டர்கள் வீடுகளுக்குப் போதுமானது. முன்னணி நிறுவனத் தயாரிப்புகளின் விலை ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, முன்னணி நிறுவனத் தயாரிப்பு பேட்டரிகள் அதன் திறனுக்குத் தக்கவாறும், வாரண்டிக்குத் தக்கவாறும் ரூ.8,000 முதல் ரூ.14,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு வீட்டு இன்வெர்ட்டர் நிறுவ ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை செலவாகிறது.
இதுகுறித்து திருச்சி பேட்டரி விற்பனை நிறுவன உரிமையாளர் ஜெ.பி.ஆர். டக்கர் கூறியது:
கடந்த 6 மாதங்களாக இன்வெர்ட்டர் விற்பனை சற்று குறைந்திருந்தது. தற்போது மீண்டும் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. இதனால், முன்னணி நிறுவனங்களின் பேட்டரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின் வெட்டில் இதேநிலை நீடித்தால், இன்வெர்ட்டர் விற்பனையும் இன்னும் அதிகரிக்கும். பேட்டரிகளுக்கு மேலும் தட்டுபாடு ஏற்படும் என்றார்.
இன்வெர்ட்டர் இருந்தாலும், அதில் உள்ள பேட்டரி ரீசார்ஜ் ஆவதற்குகூட தொடர்ந்து மின்சாரம் கிடைக்கவில்லை என்கின்றனர் அதனைப் பயன்படுத்துவோர். மேலும், மின்சாரம் இல்லாதபோது இன்வெர்ட்டரைப் பயன்படுத்தினால் அது மீண்டும் முழு அளவில் ரீசார்ஜ் ஆவதற்கு ஏறத்தாழ 3 முதல் 5 மணி நேரம் வரை ஆகும். முழுமையாக ரீசார்ஜ் செய்யப்படாத நிலையில், மின் வெட்டு நேரத்தில் அதிக நேரம் இன்வெட்டர்களை பயன்படுத்த இயலாது என்பதும் நிதர்சனமான உண்மை.
மின்சாரம் இல்லாத போது தேவையான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட அதிக மின்சாரத்தை உறிஞ்சும் மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் இந்தத் துறையில் உள்ள வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
எனினும், இந்தக் கூடுதல் நேர மின்வெட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு இன்வெர்ட்டர் வாங்குவதற்கான தேவையை ஏற்படுத்தி, கூடுதல் செலவையும் ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.