அரசு மருத்துவமனைகளில் முழுமையாக பயனளிக்காத ஜெனரேட்டர்கள்
திருச்சி, பிப். 28: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் இருந்தும், அது முழுமையாகப் பயனளிக்காத நிலையே நீடிக்கிறது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை காரணமாக ஏறத்தாழ 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை
திருச்சி, பிப். 28: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் இருந்தும், அது முழுமையாகப் பயனளிக்காத நிலையே நீடிக்கிறது.
தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை காரணமாக ஏறத்தாழ 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படுகிறது. இந்த மின் வெட்டில் மருத்துவமனைகளும் தப்பவில்லை.
முன்பு எந்த நேரத்திலும் மின் தடை ஏற்படாதவாறு பல ஊர்களில் அரசு மருத்துவமனைகளுக்கு தனியாக அந்தந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் இணைப்புகள் அளிக்கப்பட்டு, 24 மணி நேரமும் மின் விநியோகம் சீராக அளிக்கப்பட்டு வந்தது.
Advertisement
தற்போது அதிக மின் தேவை காரணமாக, தினந்தோறும் ஓரிரு மணி நேரம் என்ற நிலை மாறி, தற்போது அதிக அளவில் மின் வெட்டு செய்யப்படுவதால், போதிய மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பெரும் பாதிப்புக்கும், இன்னலுக்கும் உள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.
திருச்சியில் அண்ணல் காந்தியடிகள் நினைவு அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சிறப்பு ஏற்பாட்டின்படி தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இருப்பினும், மின் தடை ஏற்பட்டால் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. பெரும்பாலும் மின் வெட்டு இந்த மருத்துவமனைக்கு இருக்காது என்கின்றனர் ஊழியர்கள்.
மேலும், மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைந்துள்ள மணப்பாறையில் 120 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் உள்ளது. மின் வெட்டு நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
இதேபோன்று, லால்குடி, ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், ஓமந்தூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 40 முதல் 50 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் உள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நோயாளிகள் நலச் சங்கம் என்ற அமைப்புக்கு அரசு வழங்கும் நிதியைக் கொண்டு ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவையான வசதிகளையும் செய்து கொள்ள முடிகிறது.
இருப்பினும், மின் வெட்டு நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மருத்துவமனை வளாகம் முழுமைக்கும் மின் விநியோகம் போதவில்லை என்றும், அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, மருந்துகள் வைப்பறை உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் உள்ள மற்ற வார்டு பகுதிகளில் மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றின் துணையோடுதான் நோயாளிகள் இருக்க வேண்டியுள்ளது. மின் விசிறிகள் இயங்காததால், கொசுக்களின் தொல்லையும் அதிக அளவில் உள்ளது என்பது நோயாளிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. மின் தடை நேரத்தில் மருத்துவமனை முழுமையும் பயன்படும் வகையில், மாற்று மின்சாரம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ. 9.91 கோடி உதவிகள் அளிப்பு
திருச்சி, பிப். 28: திருச்சி பெருமண்டலத்தில் நல வாரிய உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டில் ரூ.9.91 கோடி மதிப்பில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் நீ.வே. தாயுமானவர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி பெருமண்டல ஆட்சி எல்லைக்கு உள்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களின் தொழிலாளர் அலுவலர்களால் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) 15 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 76,559 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 33,265 புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் 49,537 பதிவு செய்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 9,91,32,663 வழங்கப்பட்டுள்ளது.
நல வாரியங்களில் உறுப்பினராவதற்கு குடும்ப அட்டை நகல், 2 புகைப்படங்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யலாம் என்றார் அவர்.