விளையாட்டரங்கப் பணிகள் முடிவது எப்போது?
கரூர், ஜன. 24: திட்டக் காலம் முடிந்தும் நிறைவு பெறாத கரூர் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 1995-ல் கரூர் மாவட்டம் உ
கரூர், ஜன. 24: திட்டக் காலம் முடிந்தும் நிறைவு பெறாத கரூர் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 1995-ல் கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது கரூரை அடுத்துள்ள தாந்தோன்றிமலையில் மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது.
அந்த வகையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, புதிய வீரர்களை உருவாக்க மாவட்ட விளையாட்டரங்கம் தேவை என்ற கருத்தும் உருவானது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தையொட்டிய பகுதியில் புதிய விளையாட்டரங்கம் அமைக்க 15 ஏக்கரில் இடம் தேர்வானது.
கடந்த 2003-ல் ரூ. 85 லட்சத்தில் இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. ஒப்புதல் கிடைத்தவுடன் 2005-ல் பணிகள் தொடங்கின.
ஓராண்டுக்குள் பணிகள் முடியும் எனக் கூறப்பட்டாலும், தொடங்கிய வேகத்திலேயே பணிகள் நின்று போயின.
பின்னர், மந்தமான நிலையில் பணிகள் நடைபெற்று, தற்போது ரூ. 1.33 கோடி செலவான நிலையிலும், 80 சதத்திற்கும் குறைவான பணிகளே நடந்துள்ளன.
இந்த விளையாட்டரங்கில் கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கபடி, கோ-கோ, தடகளம் விளையாட்டுக்கான மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர் மாடம், விளையாட்டு அலுவலர்களுக்கான அறை, வீரர்கள் தங்கும் அறை, ஓய்வறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது வரை அதில் டைல்ஸ் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
அதேநேரத்தில், முறையான பராமரிப்பின்மையால் இந்த மைதானத்தில் செடி, கொடி, முள்புதர்கள் மண்டியுள்ளன. இதை அப் பகுதியிலுள்ள குடிமகன்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மாவட்ட விளையாட்டுத் துறை மூலமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தற்போது தனியார் கல்லூரிகள், பள்ளிகளிலேயே நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளை நடத்த அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் அனுமதியைப் பெறுவதற்குள், விளையாட்டுத் துறையினரின் பாடு திண்டாட்டம்தான்.
தமிழக அரசு தற்போது விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகம் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இவ்வாறான அறிவிப்புகள் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினாலும், அவர்கள் முறையாகப் பயிற்சி பெற வழியில்லாத நிலையே உள்ளது.
அதேபோல, விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோருக்கு அரசுத் துறை வேலைவாய்ப்பில் 5 சத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், விளையாடுவதற்கே இடமில்லாத நிலையில், எங்கிருந்து விளையாட்டுகளை மேம்படுத்துவது?
கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, தேசிய, சர்வதேச அளவில் பவர் லிப்டிங், சிலம்பம், குத்துச்சண்டை, ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு பரிசுகளை சர்வதேச அளவிலும் பெற்றுள்ளனர். எறிபந்து, தடகளம், கபடி விளையாட்டுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தனியார், அரசுப் பள்ளிகளில் படிப்போர்தான். இவர்கள் அங்குள்ள மைதானங்களில் தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்குப் போதுமான இடமும், பயிற்சியும் கிடைத்தால், அவர்களின் திறமை மேலும் மெருகூட்டப்படும். இதனால், கரூர் மாவட்டத்திற்கு கூடுதல் பெருமையும் கிடைக்கும்.
இதுகுறித்து கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. புண்ணியமூர்த்தி கூறியது:
விளையாட்டரங்கில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், எஞ்சிய பணிகளை நிறைவு செய்யவும், உள் விளையாட்டரங்கம் அமைக்கவும் ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் மாவட்டத் தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்கள் நன்கொடை வழங்கினால், இந்தத் திட்டத்தை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்றார் அவர்.