முகப்பு
திருச்சி

உதவியை எதிர்நோக்கும் சுகாதார வளாகங்கள்

கரூர், மார்ச் 16: புதுப்பிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகங்களைப் பராமரிக்க நன்கொடையாளர்கள் எதிர்பார்க்கப்படுவதால், இவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:17 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:03 PM

கரூர், மார்ச் 16: புதுப்பிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகங்களைப் பராமரிக்க நன்கொடையாளர்கள் எதிர்பார்க்கப்படுவதால், இவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

   கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2001-06-ல் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில், தமிழகம் முழுவதும் ஊராட்சிகள்தோறும் மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.

   சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இவை கட்டப்பட்டன. இவற்றில் குளியலறை, கழிப்பறை, துணி துவைக்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

   அப்போது, அந்த ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்த வளாகங்களைப் பராமரித்து வந்தன. இதற்காக ஊராட்சிகளில் இருந்து நிதி வழங்கப்பட்டது. நாளடைவில் இவற்றைப் பராமரிப்பதில் மகளிர் குழுக்கள்  ஆர்வம் காட்டவில்லை. மேலும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், அடுத்து வந்த திமுக ஆட்சியும் இதில் கவனம் செலுத்தவில்லை.

   இதனால், ஏறத்தாழ 90 சத வளாகங்களுக்கு பூட்டு போடப்பட்டது. ஒரு சில வளாகங்கள் மட்டுமே ஊராட்சித் தலைவர்களின் சுய முயற்சியால் பராமரிக்கப்பட்டன.

   இந்நிலையில், மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, இந்த வளாகங்களைச் சீரமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டதையடுத்து, தற்போது இவை சீரமைக்கப்பட்டுவிட்டன. இதற்காக, ரூ. 20,000 முதல் ரூ. 2 லட்சம் வரை அரசு நிதி வழங்கியது.

   சீரமைக்கப்பட்ட இந்த வளாகங்களைப் பராமரிக்கும் பொறுப்பை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கொடுக்க வேண்டும். இதற்குச் செலவாகும் பராமரிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள வங்கிகள், தொழில் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

   இதற்காக நன்கொடை தரும் வங்கிகள், தொழில் நிறுவனங்கள், சுதாதார வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் விளம்பரங்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

   கரூர் மாவட்டத்தில் 188 ஊராட்சிகளில் உள்ள 248 சுகாதார வளாகங்களும் சீரமைக்கப்பட்டு விட்டன. இவற்றைப் பராமரிப்பதற்கான பங்களிப்பைக் கேட்டு, வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார்.

   இதையடுத்து, கடந்த மாதம் வரை 3 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், சில தொழில் நிறுவனங்கள் மட்டும் 48 வளாகங்களின் பராமரிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளன. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் அதிகளவில் முன்வராததால், எஞ்சிய வளாகங்களைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

   சுகாதாரத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்தும் வங்கிகள், தொழில் நிறுவனங்கள், இதற்கு மாணவர்களை அனுப்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் உண்மையாகவே கிராமங்களில் சுகாதாரம் மேம்பட நன்கொடை அளிக்க வேண்டும்.

   சமுதாயத்திற்குச் சேவை செய்வதாகக் கூறும் பல்வேறு அமைப்புகள், கிராமப்புற மக்களுக்குச் சமுதாயச் சேவையாற்றக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.