முகப்பு
திருச்சி

திருச்சியில் தொடங்கியது அரசு பொருள்காட்சி

திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருள்காட்சி சனிக்கிழமை இரவு தொடங்கியது.

Updated On : 12 மே 2013, 6:40 am IST
பகிர்:

திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருள்காட்சி சனிக்கிழமை இரவு தொடங்கியது.

இந்த பொருள்காட்சியில் அரசுத் துறை அரங்குகள், அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருள்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

தற்போது 10-க்கும் மேற்பட்ட அரங்குகள்தான் உள்ளன. ஓரிரு நாள்களில் இதர துறைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுவிடும்.

Advertisement

Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை வீடுகள், கிராமப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றை விளக்கும் காட்சிகள், வேளாண், வேளாண் பொறியியல், மருத்துவம், பள்ளிக் கல்வி, நூலகம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பயனாளிகள் பயன்பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்கங்கள் அரங்குகளில் அளிக்கப்பட்டுள்ளன.

மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கர்ப்பிணி பெண்கள் இலவசமாக ஸ்கேன் செய்து கொள்ளும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்குக்கு வருபவர்களின் ரத்த அழுத்தம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மாதிரிகள் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

மாநகரக் காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்புப் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகள், பல்வேறு ரக துப்பாக்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக சனிக்கிழமை மாலை நடைபெற்றபொருள்காட்சித் தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன் பேசியது:

திருச்சியில் பொழுதுபோக்கு வசதி இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு திருச்சியில் அரசு பொருள்காட்சி நடத்தப்பட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சியில் மொத்தம் 29 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள், அத்திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகளை மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி பொருள்காட்சியைத் தொடக்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா என்றார்.

அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் பேசியது:

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசு பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிகளை விட மக்கள் நலத்திட்டங்களை அதிகம் அறிவித்து செயல்படுத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா என்றார்.

முன்னதாக இந்த விழாவில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3000 பயனாளிகளுக்கு ரூ. 5.94 கோடி மதிப்பிலானநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், மக்களவை உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, என்.ஆர். சிவபதி, சந்திரசேகர், த. இந்திராகாந்தி, மேயர் அ. ஜெயா, துணை மேயர் ஆஷிக்மீரா, ஆணையர் தண்டபாணி, செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் தானப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.