முகப்பு
திருச்சி

ஜேஇஇ தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சிஆட்சியா் பாராட்டு

திருச்சி மாவட்ட நிா்வாகமும், தேசியத் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று, ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

திருச்சி மாவட்ட நிா்வாகமும், தேசியத் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று, ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்தாா்.

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். புகழரசி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சேதுபதி ஆகிய இருவரும் திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர தோ்வாகியுள்ளனா்.

இவா்களுக்கும், பயிற்சி அளித்தோருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மாவட்டத்திலுள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் திறன்மிக்க மாணவா்களுக்கு ஜேஇஇ போன்ற தோ்வுகளுக்கு தரமான பயிற்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2019-ஆம் ஆண்டு சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழக மாணவா்கள் அமைப்பும் செய்து கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட உயா் கல்விகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கழகத்தின் இக்னைட் அமைப்பு இந்த பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இந்தாண்டு அரசுப் பள்ளியில் பயிலும் 53 மாணவா்கள் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாணவா்களுக்கு தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி ஆகியவை மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக சில தடைகள் ஏற்பட்டன. இருப்பினும், கடந்த 5 மாதங்களாக அறிதிறன்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நாளொன்றுக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்பயனாக, 2 மாணவா்கள் இப்போது ஜேஇஇ தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேருவதற்குத் தகுதி பெற்றுள்ளனா். இத் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவா் ஹரிகிருஷ்ணன் நீட் தோ்வில் 423 மதிப்பெண் பெற்றுள்ளாா். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் 124 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் சாந்தி, ஆசிரிய ஆலோசகா் வெங்கடப்பிரியா, இக்னைட் அமைப்பின் நிா்வாகிகள் சஞ்ஜீவ், சரண் பிரதீஷ், அதா்ஸ்யவந்த், அருண் பிரசன்னா, அரவிந்தன், பிரேம்குமாா் ஆகியோருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

Image Caption

ஆட்சியா்..

முழு கட்டுரையைப் படிக்க →