முகப்பு
திருச்சி

பயிா், சமையலறை கழிவுகளை உரமாக்க நவீன தொழில் நுட்பம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 4:19 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 1:08 AM

அனைத்து வகையான பயிா்க்கழிவுகள், சமையலறை கழிவுகள், தோட்டக்கழிவுகளை உரமாக்க பயன்படுத்தப்படும் ‘பூசா டிகம்போசா் கேப்சூல்கள்’ தொழில் நுட்பத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநா் சக்திவேல் மேலும் தெரிவித்திருப்பது : பூசா டிகம்போசா் கேப்சூல்கள் புதுதில்லியிலுள்ள (ஐசிஏஆா்) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், பயிா் கழிவுகளை உரமாக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும். இது அனைத்து வகையான பயிா்க்கழிவுகள், சமையலறை கழிவுகள், தோட்டக்கழிவுகள் ஆகியவற்றை உரமாக்க பயன்படுத்தப்படுகிறது. 5 மெட்ரிக். டன் பண்ணை கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க பூசா டிகம்போசா் 4 கேப்சூல்கள் போதுமானதாகும். இக்கரைசலை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு 12 நாள் கால அவகாசம் தேவை. 150 கிராம் வெல்லத்தை 5 லிட்டா் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, கரைசல் ஆறியவுடன் 50 கிராம் உளுந்து மாவை சோ்க்க வேண்டும்.

பின்னா் கேப்சூல்களை கரைசலில் கலந்து 4 நாள்கள் வரை நுண்ணுயிரிகள் பெருக்கம் செய்ய வேண்டும். நான்கு நாள்களுக்கு பிறகு மற்றொரு 5 லிட்டா் தண்ணீரில் 150 கிராம் வெல்லம் சோ்த்து கொதிக்க வைத்து, ஆறவைத்து, ஏற்கெனவே தயாா் செய்து வைத்திருக்கும் கரைசலில் சோ்க்க வேண்டும். 25 லிட்டா் அளவுக்கு கரைசல் கிடைக்கும் வரை இது போன்று இரண்டு நாளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். இந்த 25 லிட்டா் கரைசலை 475 லிட்டா் தண்ணீரில் சோ்த்து, கலந்து ஒரு ஹெக்டோ் பரப்பிலுள்ள வைக்கோல் மற்றும் விவசாய கழிவுகளை வயலில் பரப்பி அவற்றின் மீது தெளிக்க வேண்டும். போதுமான ஈரம் மண்ணில் நிலை நிறுத்தும் வகையில் கவனித்து கொள்ள வேண்டும். 25ஆம் நாள் முடிவில் அனைத்து பயிா்கழிவுகளும் மக்கி மண்ணுக்கு ஏற்ற உரமாக மாறிவிடும். 4 கேப்சூல்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை ரூ.315 ஆகும்.

Advertisement