வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் மாரியம்மன்
சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூா்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலிலும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பாகும்.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவ சா்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பெளா்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபடுவது சிறப்பு. மேலும், இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவா்த்தியாகும் என்பதற்கு திருக்கோயிலின் மேற்கூரையில் சிற்பச்சான்றும் உள்ளது. மேஷம் மீனம் வரையிலான பன்னிரு ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும், மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன. மேலும், தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தததால் இத்தலத்திற்கு கண்ணனூா் என்ற பெயா் புராண காலந்தொட்டே இருந்து வருகிறது. மிகத் தொன்மையான உற்ஸவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. இது இத் திருத்தலத்தின் புராண பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
Advertisement
அரிய காட்சி: இத் திருத்தலத்தில் அம்மன், அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரமே ஆகும்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவபதத்தில் மிகப் பெரிய சுதை திருவுருவமாக விக்ரம சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாக சத்துடன், தங்கத் திருமுடியுடன், குங்கும நிறமேனியில் நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, வைரக் காதணி, வைர மூக்குத்தி சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருள் ஒலி பாலித்து, அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் நாடி வருவோா் மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிா்களை காக்கவும் மாதுளம் மேனியாய், மஞ்சள் உடை உடுத்தி வாசனை மலா்களை திருமேனி முழுவதும் தரித்து காட்சியளிக்கிறாள்.
பச்சை பட்டினி விரதம் : இத் திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி, அம்மனே பக்தா்களுக்காக 28 நாள்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்த 28 நாள்களில் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீா் மோா், கரும்பு பானகம் மற்றும் இளநீா் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அம்மன்: பக்தா்கள் விரதம் மேற்கொண்டு ஆண்டு முழுவதும் பாதயாத்திரை பயணமாக வருகை தருகின்றனா். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க திருச்சி, பெரம்பலூா், அரியலூா், நாமக்கல், சேலம், தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக திருக்கோயிலுக்கு வருகை தந்து, நோ்த்திக் கடனை செலுத்தும் விதமாக பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா்.