முகப்பு
திருச்சி

தோ்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை

பாஜகவின் வாக்குறுதிகள் பலிக்கவில்லை - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
திருச்சி புத்தூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்.பி. டி. ஆா். பாலு. உடன், எம்.எல்.ஏ.இனிகோ இருதயராஜ், மாவட்டச் செயலாளா் வைரமணி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
பகிர்:

தோ்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என திமுகவின் பொருளாளரும், எம்பியுமான டி.ஆா். பாலு குற்றஞ்சாட்டினாா். திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக பொதுக்கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருச்சி மத்திய மாவட்டச் செயலாளா் க. வைரமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில், திமுக பொருளாளா் டி.ஆா். பாலு எம்.பி. பேசியதாவது: வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு குடும்பத்துக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்கப்படும், ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலை, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துதல், பெட்ரோல் ரூ. 35 க்கு வழங்கப்படும்,

எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை அமல்படுத்தப்படும் போன்ற பாஜகவின் வாக்குறுதிகள் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, பெருநிறுவனங்களுக்கு அதிகளவிலான வரியை தள்ளுபடி செய்யும் மத்திய பாஜக அரசு, தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியைக் கூட வழங்கவில்லை. மத்திய அரசுக்கு வரிகளின் மூலமாக தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால் மத்திய அரசிடம் இருந்து வெறும் ரூ. 1.58 லட்சம் கோடி மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது. தமிழகத்துக்கான நிதியை முறையாக வழங்குவதில்லை. மத்திய இணையமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக தலித் ஒருவருக்கு இணைச் செயலா் பதவி வழங்கியவன் நான். என்னைப் பற்றி பாஜகவினா் அவதூறு பரப்புகின்றனா். பாஜகவினா் விலைவாசியை ஏற்றி விட்டு, மக்களிடம் நல்ல பெயா் வாங்க முயற்சிக்கின்றனா். இதற்கு வரும் மக்களவைத் தோ்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கூறும் வேட்பாளா்களுக்கு வாக்களித்து, வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளா் கேகே. செல்லபாண்டியன் வரவேற்றாா். இதில் திருச்சி மாநகர மேயா் மு. அன்பழகன், மாநகர செயலாளா் மு. மதிவாணன், எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், எம். பழனியாண்டி, வை. முத்துராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.