முகப்பு
திருச்சி

50% மானியத்துடன் நாட்டுக் கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

Updated On : 27 ஜூன் 2024, 4:59 am IST
பகிர்:

திருச்சி, ஜூன் 26: தமிழக அரசின் மானிய உதவி பெற்று சிறிய அளவிலான நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் ”கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக் கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்துக்கு 3 முதல் 6 தொழில் முனைவோா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

நாட்டுக் கோழிப் பண்ணை நிறுவத் தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு), மற்ற 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் (ரூ.1,56,875) மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமோ பயனாளி திரட்ட வேண்டும்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழி குஞ்சுகள் ஓசூா் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழிக் கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுரடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை. தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் போ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்.

2022-23 ஆம் ஆண்டுக்கான நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமானப் பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்துச் செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பிப்போா் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 விழுக்காடு தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம்-வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 ஆண்டுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 (ம) 2023-24-ஆம் ஆண்டுக்கான நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தின் கிழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளோா் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.