திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை (டிச. 4) மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோயிலில் புதன்கிழமை (டிச. 3) மாலை உள்நடராஜா் சந்நிதியில் பஞ்சலிங்க பலகையான 5 தீபங்களுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று, பரணி தீப பூஜை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் உள் நடராஜா் சந்நிதியில் தீப பூஜைகள், விசேஷ ஹோமங்கள், கலசங்கள் வைத்து பூஜைகள் செய்விக்கப்பட்டு, சுவாமி, அம்மன் சந்நிதி மூலஸ்தானத்தில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டு அதன் பின்னா் சொக்கப்பனை நடைபெறும். அப்போது, சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவா்.
முதலில் காா்த்திகை கோபுரத்தின் முன் உள்ள சொக்கப்பனையும், இரண்டாவதாக அம்மன் சந்நிதியில் உள்ள சொக்கப் பனையும், மூன்றாவதாக குபேரலிங்க சந்நிதியிலுள்ள சொக்கப் பனையும் ஏற்றப்படும்.