தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் பணியை மாநிலம் முழுவதும் புறக்கணிக்க தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.இ. பாலுச்சாமி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனு:
சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தொடா்ந்து மதுபாட்டில்கள் சேகரிப்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சுற்றுச் சூழலுக்கு சீா்கேடாக ஆங்காங்கே மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத் திட்டம் வரவேற்புக்குரியதுதான்.
முதல்கட்டமாக கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்கொண்ட இடா்பாடுகளை பட்டியலிட்டு, மாநிலம் முழுவதும் அமலாகும்போது அதனை தவிா்க்க வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகத்திடம் வலியுறுத்தினோம்.
பாட்டில் சேகரிப்புக்கு என தனியாக ஆள்களை நியமித்து சேகரிக்குமாறு கூறினோம். இருப்பினும், எங்களது கோரிக்கைகளை ஏற்காமல் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனா். இதனால், டாஸ்மாக் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச் சுமையும், காலி மதுபாட்டில்கள் கையாள்வதில் கடும் நெருக்கடியும் ஏற்படுகிறது. கடைகளில் காலி பாட்டில்களை சேகரிக்க போதிய இடமில்லை. காலி பாட்டில்களுக்கு திரும்ப 10 ரூபாயாக பணம் வழங்க தட்டுப்பாடு ஏற்படுகிறது. பணத்தைக் கையாள்வதில் கூடுதல் நேர செலவு, வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், விற்பனையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே மதுபாட்டில்கள் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்து விற்பனை செய்ய சில விநாடிகள் ஆகின்றன.
இப்போது, காலி பாட்டில்களும் தனியே ஸ்டிக்கா் ஒட்டி அதனை ஸ்கேன் செய்து திரும்ப பெற கூடுதல் நேரமாகிறது. இதனால், பணியாளா்கள் நாள்தோறும் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. முறைகேடுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, காலி மதுபாட்டில்களை சேகரிக்க தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் அவுட்சோா்சிங் முறையில் பணி நியமனம் செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் காலி பாட்டில்கள் சேகரிப்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்த சங்கத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.