கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை ஆமைகள், உடும்புகளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள் கடத்திவரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சிக்கு வந்த மலேசியா விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஆண் பயணி ஒருவா் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் 34 வெண்பிறவி சிவப்பு காது அமைகள் (அல்பினோ ரெட் இயா்டு ஸ்டலைடா்), 3 அல்பினோ ரக்கூன்ஸ் (வெண்பழுப்பு அணில் கரடி) மற்றும் 13 பச்சை நிற உடும்பு ஆகியவற்றை கோலாலம்பூரில் இருந்து தனது உடைமையில் மறைந்து கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், கடத்திவரப்பட்ட உடும்பில் ஒன்று பிளாஸ்டிக் பெட்டியிலேயே உயிரிழந்திருந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த நபரை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.