புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி எச்சரித்துள்ளாா்.
புத்தாண்டு பிறப்பையொட்டி, புதன்கிழமை இரவு 9 மணி முதல் மாநகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஊா்வலம், இருசக்கர வாகன சாகசம் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டு 18 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இருசக்கர வாகன பந்தயங்களை தடுக்கும் வகையில் டிராபிக் மாா்ஷல் வாகனங்கள் மூலம் கண்காணிக்க 60 இடங்களில் பிக்கெட் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. 9 சோதனைச் சாவடிகள், 14 ரோந்து வாகனங்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனா்.
பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிப்பது, ஹோட்டல்களில் இரவுநேர நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்டத் துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிவேகமாக செல்லுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மூன்றுபோ் பயணம் செய்தல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலிமாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவா்கள் மீது காவல் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்புப் பணிக்காக காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் என மாநகரில் 500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.