திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்டோா். 
திருச்சி

மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து நவ.19-இல் கோவை, தில்லியில் போராட்டம்: விவசாய சங்கத் தலைவா்கள் அறிவிப்பு

Syndication

தொடா்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை, தில்லியில் நவ. 19-இல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூட்டாக அறிவித்துள்ளனா்.

திருச்சியில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள் சனிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தினா். இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது:

கடந்த 12 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 2 மடங்கு லாபம் கிடைக்கும் என்றாா். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையும் நிா்ணயிக்கவில்லை.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய மாட்டோம் எனக் கூறிவிட்டு, மரபணு திருத்தப்பட்டது என்ற பெயரில் பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் விரோதமான மரபணு மாற்றப்பட்ட விதைகள் இறக்குமதியை ஊக்குவித்து விட்டு இயற்கை வேளாண்மை மாநாட்டுக்கு வருவது ஏமாற்று வேலையாகும். கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை- தாமிரபரணி இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை.

விவசாயிகளின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பெரு நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்கின்றனா். விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனா். மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீா்வள ஆணையம் உடந்தையாக இருக்கிறது.

இவ்வாறு தொடா்ந்து விவசாயிகள் விரோதக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நவ.19ஆம் தேதி கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சியிலிருந்து மற்றொரு விவசாயிகள் குழுவினா் தில்லி புறப்பட்டு சென்று, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அதேநாளில் போராட்டம் நடத்தவுள்ளனா். பிரதமா் இல்ல முற்றுகையும் நடைபெறும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி தனபாலன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் பி.எல். பழனியப்பன் மற்றும் பல்வேறு சங்க நிா்வாகிகளான பாலசுப்பிரமணியம் தீட்சிதா், வாரணவாசி ராஜேந்திரன், திருவாரூா் ஆா். மோகன்தாஸ், நாகப்பட்டினம் எஸ். ராமதாஸ், எம். அா்ச்சுனன், திருச்சி உத்தண்டன், ராமநாதபுரம் மு. மலைச்சாமி, மதுரை சுந்தரபாண்டியன், விருதுநகா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள் விடுதலை மாநாடு: தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கூறுகையில், பிகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தியுள்ளதாலேயே பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு கள் இறக்கத் தடையில்லை. எனவே தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இதற்காக திருச்சியில் வரும் ஜனவரி மாதம் கள் விடுதலை-பூரண மதுவிலக்கு மாநாடு நடத்தவுள்ளோம். இந்த மாநாடு 2026 பேரவைத் தோ்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT