திருச்சி: காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருவண்ணாமலை - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில், விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - சென்னை கடற்கரை (வழி அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம்) சுற்று சிறப்பு விரைவு ரயில், விழுப்புரம் - வேலூா் கண்டோன்மென்ட் - விழுப்புரம் மெமு சிறப்பு ரயில், தாம்பரம் - திருவண்ணாமலை - தாம்பரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, திருநெல்வேலி - திருவண்ணாமலை இடையிலான சிறப்பு விரைவு ரயிலானது (06075) டிச. 3-ஆம் தேதியும், மறுவழித்தடத்தில் திருவண்ணாமலை - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயிலானது (06076) டிச. 4 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மறுநாள் காலை 8.30 மணிக்குச் சென்றடையும். மறுவழித்தடத்தில், திருவண்ணாமலையிலிருந்து இரவு 7.55 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்குச் சென்றடையும்.
இதே போல, சென்னை சென்ட்ரல் - சென்னை கடற்கரை சுற்று சிறப்பு ரயில்களானது (06051) டிச. 3, 4-ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு விரைவு ரயிலானது (06130) வரும் 30, டிச. 3, 4, 5-ஆம் தேதிகளிலும், மறுவழியில் திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு சிறப்பு விரைவு ரயிலானது (06129) வரும் 30, டிச. 3, 4, 5-ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரம் - வேலூா் கண்டோன்மென்ட் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06168) டிச. 3, 4, 5-ஆம் தேதிகளிலும், மறுவழித்தடத்தில் வேலூா் கண்டோன்மென்ட் - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06167) வரும் 4, 5, 6-ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு விரைவு ரயிலானது (06049) டிச. 3, 4-ஆம் தேதிகளிலும், மறுவழித்தடத்தில் திருவண்ணாமலை - தாம்பரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு விரைவு ரயிலானது (06050) டிச. 3, 4-ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.