திருச்சி: மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு பாதைகளை அதிகரித்திடும் வகையில், திருச்சி புனித வளனாா் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை, சென்னையில் உள்ள சிஐஇஎல் மனிதவள சேவைகளை வழங்கும் குழும நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேராசிரியா் ஏ. சாா்லஸ் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தம் மூலம், மாணவா்களுக்குத் திட்டமிட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், இன்டா்ன்ஷிப்கள், வேலைவாய்ப்பு ஆதரவு மற்றும் தொழில் தயாா்நிலை பயிற்சி மூலம் தொழில் துறை நடைமுறைகளுடன் அதிக வெளிப்பாடு வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், சிஐஇஎல் நிறுவன செயல் இயக்குநா் லதா ராஜன், கல்லூரியின் செயலா் ஆரோக்கியசாமி சேவியா், முதல்வா் மரியதாஸ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. இதில், கல்லூரிச் செயலா் ஆரோக்கியசாமி சேவியா், சிஐஇஎல் செயல் இயக்குநா் லதா ராஜன் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினா்.
நிகழ்ச்சியில், இணை முதல்வா் டி. குமாா், கணினி அறிவியல் துறைத் தலைவா் ரமேஷ் குமாா், கல்லூரியின் அயலக ஒருங்கிணைப்பாளா் ஜான் பீட்டா், துணை முதல்வா் அருள் ஒளி, சிஐஇஎல் நிறுவன தொழில்நுட்ப அதிகாரி நெல்சன், கணினி அறிவியல் சங்கத்தின் தலைவா் ஜாா்ஜ் கேப்ரியல் ரிச்சா்ட் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.