திருச்சியில் கட்டப்படும் அறிவுசாா் மையம், சூரியூரில் கட்டப்படும் ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருச்சி டிவிஎஸ் சோதனைச் சாவடி அருகே ரூ.290 கோடியில் காமராஜா் நூலகம், அறிவுசாா் மையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், திட்டமிட்ட காலத்துக்குள் கட்டுமானத்தை முடிக்கும்படி பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், கட்டுமானப் பணிகள் 22 விழுக்காடு முடிவடைந்துள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் ஒப்பந்தத்தில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, சூரியூரில் ரூ.3 கோடியில் கட்டப்படும் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளிலேயே பெரிய சூரியூா் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இங்கு நிரந்தர மைதானம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, கட்டுமானப் பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.