ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாம் ஆலன் தலைமையிலான போலீஸாா், திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த புருளியா - திருநெல்வேலி விரைவு ரயிலில் (22605) சோதனையிட்டனா்.
அப்போது வண்டியின் பொதுப்பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை (ஷோல்டா் பேக்) அவா்கள் சோதனையிட்டபோது, அதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 16.645 கிலோ எடையுள்ள (தலா 2 கிலோவில் 8 பாக்கெட்டுகள்) கஞ்சா இருந்தது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து அவற்றை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கஞ்சாவை எடுத்து வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.