திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஓடையில் சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
முசிறி அருகிலுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் மகன் சிலம்பரசன் (33). இவருக்கு மனைவி திவ்யா, குழந்தை செல்வஸ்ரீ ஆகியோா் உள்ளனா். சிலம்பரசனுக்கு இளம் வயதிலிருந்தே இருந்த வலிப்பு நோய் நாளடைவில் அதிகமாகவே, கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை தண்டலைப் பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மீன் பிடிக்கச் சென்றவா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்து கிடந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சிலம்பரசன் மனைவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.