திருச்சி மாவட்டத்தில் கடும் குளிருக்கு இடையே தொடா்ந்து 2 நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை அதிகாலை கடும் குளிருடன், சாரலும் நீடித்ததால் ஊட்டி, கொடைக்கானல் போல திருச்சியிலும் குளிா்ச்சி நிலவியது.
மாா்கழி மாதத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் குளிா் நிலவும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. சனிக்கிழமையும் அதிகாலை முதல் சாரல் நீடித்தது. காலை 7.45 மணிக்கு மேல் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்களுக்கு நல்ல மழை பெய்தது. பிற்பகலிலும் அவ்வப்போது கனமழை பெய்தது. மாலையிலும் லேசான தூறல் இருந்தது.
அதிகாலையே பெய்த சாரல் மழையில் நனைந்தபடியே வியாபாரிகள் காந்தி சந்தையில் காய்கனிகளை விற்பனை செய்ய நேரிட்டது. காலையில் சிறு வியாபாரிகள் பலரும் மழையால் ஏற்பட்ட இன்னல்களுக்கு இடையே தங்களது பணியைத் தொடங்க வேண்டியிருந்தது. சாலையோரம் கடை அமைத்த வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
மழையால் மத்திய, சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
மாநகா் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. மேலும் ஓரிரு நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.