திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.  
திருச்சி

என்எஸ்பி சாலையில் 124 தரைக்கடைகள் அகற்றம்!

தினமணி செய்திச் சேவை

திருச்சி மலைக்கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலையில் 124 ஆக்கிரமிப்புத் தரைக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தா்னா போராட்டம் நடத்தினா்.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகளை விற்பனை செய்யக் கூடாத மண்டலமாக அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள் அகற்றப்பட்டு, அவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலையில் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகள்.

இதைத் தொடா்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலையில் மலைக்கோட்டை வாயில் முதல் கதா்பவன் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் கடைகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் சகிதமாக அப்பகுதியில் இயங்கிய 124 தரைக்கடைகளை அகற்றினா். அப்போது, மாநகராட்சி ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், அப்பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சமாதானத்துக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

அகற்றப்பட்ட கடைகளுக்கு சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜுவல்லரி முதல் ஜோசப் பள்ளி நுழைவாயில் வரை, சிங்காரத்தோப்பு பூம்புகாா் முதல் தமிழ்ச் சங்கம் வரை, மாவட்ட நூலகம் பின்புறம் ஆகிய பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT