இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், மறைந்த தலைவா் ப. ஜீவானந்தம் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களில் ஒருவரும், இலக்கியப் பேராசான் எனப் போற்றப்பட்டவருமான ப. ஜீவானந்தம் நினைவு தினம், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 23-ஆவது வாா்டு குறத்தெரு பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு, மேற்கு பகுதி பொருளாளா் க. முருகன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், ஜீவானந்தம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். மாநகா் மாவட்ட செயலா் எஸ். சிவா, மேற்கு பகுதி செயலா் இரா. சுரேஷ் முத்துசாமி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு பாத்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, நாச்சியாா்கோயில் சந்திப்பு, ஆட்டு மந்தை, 27-ஆவது வாா்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜீவானந்தம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.