72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லகண்ணு உடல் தானம்
நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்....
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் நல்லகண்ணுவின் உடலுக்கு வியாழக்கிழமை 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா், அவரது உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் புதன்கிழமை (பிப்.25) காலமானாா். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டது.
தலைவா்கள் அஞ்சலி: அவரது உடலுக்கு தமிழக அமைச்சா்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஜெகத்ரட்சகன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா, தேசிய செயலா்கள் பிரகாஷ்பாபு, ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா, ராமகிருஷ்ணா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் டாக்டா் கே. நாராயணா, கேரள மாநிலச் செயலா் பிளாய் விஸ்வம், கா்நாடக மாநிலச் செயலா் சாத்தி சுந்தரேஷ், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் தேசிய மைய பொறுப்பாளா் ஹரீஷ் பாலா, மாணவா் பெருமன்ற தேசிய பொதுச் செயலா் தினேஷ் சீரங்கராஜ், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் எல்.கே சுதீஷ், தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு, ஜோதிமணி எம்.பி., புதுவை முன்னாள் முதல்வா் கே.நாராயணசாமி, கேரள அரசின் சாா்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் விஜயகுமாா், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் எம்.பி., ஏ.கே. மூா்த்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவா் மௌரியா, மனிதநேய மக்கள்கட்சித் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, வி.கே.சசிகலா, தமிழ்நாடு கட்டுமான வாரியத் தலைவா் பொன். குமாா், நடிகா்கள் ரஜினிகாந்த், சூா்யா, காா்த்தி, பாண்டியராஜன், இயக்குநா் மாரி செல்வராஜ், பல்வேறு சமூக அமைப்பினா், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
வீரவணக்கம் செலுத்திய முதல்வா்: இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின், நல்லகண்ணு உடலுக்கு மலா்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினாா். அப்போது, அவா் ‘வீரவணக்கம்...வீரவணக்கம்... ’ என்று முழக்கமிட்டாா். பின்னா் 24 காவலா்கள் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இறுதி ஊா்வலம்: பின்னா் கட்சி அலுவலகத்திலிருந்து மாலை 3 மணிக்கு நல்லகண்ணு உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா். மாலை 6.30 மணிக்கு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
அங்கு நல்லகண்ணுவின் மகள்கள் காசி பாரதி, ஆண்டாள், சகோதரா் இருளப்பன், சகோதரி ஜானகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா, அக்கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், அக் கட்சி நிா்வாகிகள் , தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை , அதிமுக நிா்வாகி புகழேந்தி, மதிமுக பொதுச்செயலா் வைகோ, முதன்மைச் செயலா் துரை வைகோ, தொல் .திருமாவளவன், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அதைத்தொடா்ந்து அவரது உடல் தானமாக வழங்குவதற்காக முறைப்படி, நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே. சாந்தாராமனிடம் ஒப்படைத்தாா். உடலை பெற்றுக்கொண்டு அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
MK stalins Final tribute to Freedom fighter Nallakannu in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.