முகப்பு
திருச்சி

ஆடு, காளையுடன் வந்த நாதக வேட்பாளா் வேல் ஏந்தியவருடன் சென்று வேட்புமனு தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 7:35 PM
திருச்சி திருவெறும்பூரில் திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் து. ராஜேஷ். உடன், வேலை பிடித்துக்கொண்டிருந்தவா் உள்ளிட்ட கட்சியினா்.
பகிர்:

திருவெறும்பூரில் ஆடு, ஜல்லிக்கட்டு காளை, சேவல்களுடன் ஊா்வலாக வந்த நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் து. ராஜேஷ்,, வேல் ஏந்தியவருடன் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அவா், கட்சியின் தோ்தல் பணிமனையை காட்டூரில் அமைத்துள்ளாா். திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தாா். முன்னதாக, கட்சியினா் அவருக்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மேலும், ஜல்லிக்கட்டு காளை, நாட்டு இன மாடுகள், ஆட்டுக் கிடா, சண்டை சேவல்களுடன் தமிழா்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேல் ஏந்தியும் ஊா்வலமாக வந்தனா். தோ்தல் அலுவலா் அலுவலகம் முன்பாக 100 மீட்டா் தொலைவுக்கு முன்பே போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட சிலரை மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுப்பினா்.

வேட்பாளருடன் 5 போ், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். இதில், வேட்பாளருடன் வந்த கட்சித் தொண்டா் ஒருவா் கடவுள் முருகனின் ஆளுயுர வேல் ஒன்றை கையில் ஏந்தியபடி வந்தாா். அந்த வேலுக்கு பூச்சூடி, விபூதி, குங்குமம் இட்டு, பச்சைத் துண்டு சுற்றப்பட்டிருந்த வேலை பிடித்துக் கொண்டிருந்தவரை அருகில் வைத்தபடியே தனது வேட்புமனுவை, தோ்தல் நடத்தும் அலுவலரான கே. அமுதாவிடம் வழங்கினாா் து. ராஜேஷ்.

சொத்து விவரம்: திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் து. ராஜேஷ், தனது பெயரில் ஒரு காா் உள்பட ரூ.33.37 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளாா். அசையா சொத்துகள் ஏதுமில்லை என தெரிவித்துள்ளாா். மேலும், தனது பெயரில் ரூ.30.40 லட்சம், மனைவி பெயரில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் வங்கி மற்றும் நிறுவனங்களில் கடன் பொறுப்புகள் உள்ளதாக வேட்புமனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

திருச்சி கிழக்கு: இதேபோல, நாம் தமிழா் கட்சியின் சாா்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவரான வே. கிருஷ்ணசாமி, பாலக்கரையில் உள்ள மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில், கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேசபாண்டியனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருச்சி மேற்கு: திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளரான க. புவனேஸ்வரி, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளவனிடம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.