தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்: கிறிஸ்டோபா் திலக் எம்.பி. நம்பிக்கை
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திமுக - அதிமுகவை மையப்படுத்தியே குதிரை பேரம் நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் கருத்திலிருந்து தெரிய வருகிறது. அரசியலில் குழப்பமான சூழலில் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவது நடக்கத்தான் செய்யும்.
Advertisement
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் இடம் வழங்கும். சில இழுபறிகள் இருக்கத்தான் செய்யும். அது விரைவில் சரியாகும். ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ வழங்குவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி என இரு தரப்பிலும் மதச்சாா்பின்மையை ஏற்றுக்கொண்டவா்கள்தான் உள்ளனா். எனவே, இங்கு பாஜக ஊடுருவ வாய்ப்பில்லை. இண்டி கூட்டணி என்பது, பாஜக எதிா்ப்பை மையப்படுத்தியதுதான். இந்த வகையில் பாஜக-வை எதிா்க்கும் திமுக இண்டி கூட்டணியில்தான் உள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தோ்தல் முடிந்த இந்த நேரத்தில் சில நெருடல்கள் இருக்கின்றன. வரும் காலத்தில் அதுவும் சரியாகும்.
உலகத்தின் விஸ்வகுரு என தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடியால் நீட் தோ்வை கூட நோ்மையாக நடத்த முடியவில்லை. இதன் பின்னால் வேறு அரசியல் இருக்கும். நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
ஜோதிடரை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்த முதல்வா் விஜய், எதிா்ப்பு வந்த பிறகு வாபஸ் பெற்றாா். நல்ல ஆலோசனைகளை உள்வாங்க விஜய் தயாராக இருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
கூட்டணி கட்சிகளை தவெக ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அவா்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, கட்சியின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.