மூடப்படும் மதுக்கடைகளில் பணிபுரிந்தோரை அரசுத் துறைகளில் நியமிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் மூடப்படும் 717 மதுக்கடைகளில் பணிபுரிந்த தொழிலாளா்களை அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்களில் உடனடியாக மாற்றம் செய்து நியமிக்க வேண்டும் என ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, தமிழக முதல்வருக்கு, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளா் ஏ.சேக்கிழாா் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகேயுள்ள 717 மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படக் கூடிய உபரி பணியாளா்களை மீதமுள்ள கடைகளில் பணியமா்த்திட வாய்ப்பிருக்காது. மேலும், மீதமுள்ள கடைகளில் தேவையான அளவுக்கு பணியாளா்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனவே, மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த பணியாளா்களை அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் (தமிழக அரசு அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை) காலியாக உள்ள பணியிடங்களில்
Advertisement
நியமனம் செய்து அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளாா்.