அரியலூர்

"முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகளாகின்றன' வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலப் பணி தொடங்குவது எப்போது? இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர் - கடலூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே, அரசால் அறிவிக்கப்பட்ட உயர்நிலை மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என இருமாவட்ட மக்களும் வலியுறுத்துகின்றனர்.

சி.சண்முகவேல்

அரியலூர் - கடலூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே, அரசால் அறிவிக்கப்பட்ட உயர்நிலை மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என இருமாவட்ட மக்களும் வலியுறுத்துகின்றனர்.

2010-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில், கடலூர் - அரியலூர் எல்லைப் பகுதியில் உள்ள வெள்ளாற்றுத் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தரைப்பாலப் பிரச்னையால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது 2 மாவட்ட மக்களும் ஆற்றைக் கடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும், இவ்வழியாக அரியலூர் - பெண்ணாடம் செல்ல வேண்டிய தனியார் மற்றும் மினி பேருந்துகள், திட்டக்குடி, கருவேப்பில்லைக்குறிச்சி,விருத்தாசலம், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளைச் சுற்றி வரவேண்டிய நிலை இருந்ததால் வேலைக்குச் செல்வோரும், மாணவ,மாணவிகளும் மிகவும் அவதிப்பட்டனர். இதனிடையே, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திரசோழபுரம், மாளிகைக் கோட்டம், பொன்னேரி, இறையூர், முருகன்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், முதுகுளம், தெத்தேரி, முள்ளுக்குறிச்சி, ஆதனகுறிச்சி, மாத்தூர்,செந்துறை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களையும் ஒன்றிணைக்கும் பகுதியாக உள்ள வெள்ளாற்றின் கரையோரம் சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும். இதனால் சென்னை செல்லும் அரியலூர் மக்களுக்கு 30 கி.மீ. பயண நேரம் குறையும் என இரு மாவட்டப் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று பாலம் கட்ட ஆய்வு நடத்திய பின் 2013, டிசம்பர் 13-ல் சென்னையில் நடைபெற்ற ஆட்சியர்கள் மாநாட்டில், தொழுதூர் - விருத்தாசலம் வரை இணைப்புச்சாலை அமைத்து, சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் உயர்நிலை மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால் நிதித்துறை ஒப்புதல் அளிக்காததால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வரை வெள்ளாற்றின் குறுக்கே தனியார் சிமென்ட் ஆலைகளின் உதவி, மக்களின் பங்களிப்போடு செம்மண் சாலையமைத்து இரு மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் தனியார் பேருந்துகள் மட்டும் சென்று வருகின்றன. ஆனால் மழைக்காலங்களில் அந்தச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சாலையமைப்பதுமான நிலையே உள்ளது.

இதுகுறித்து செந்துறை, ஆலத்தியூர் பகுதி முன்னாள் கவுன்சிலர் முள்ளுக்குறிச்சி சிவப்பிரகாசம் கூறியது: “இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் பெண்ணாடம் சென்று வருகின்றனர். ஆனால் மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது அவர்கள் விடுமுறை எடுத்து வீட்டிலேயே தங்கும் நிலை உள்ளது.  பாலம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளபோதிலும், பணிகள் தொடங்கப்படவில்லை.

மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் தாற்காலிக பாலம் அமைத்துத் தர வேண்டும். நிரந்தரப் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்’ என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT