புனித பிரான்சிஸ் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையம் மூடல்
கோவை அரசு மருத்துவமனை சாா்பில் புனித பிரான்சிஸ் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை சாா்பில் புனித பிரான்சிஸ் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
கோவையில் கரோனா 2 ஆவது அலை மிகத் தீவிரமாக பரவியது. இதனால், அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை, பரிசோதனைக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நெருக்கடியைத் தவிா்க்க அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையம் அருகிலுள்ள புனித பிரான்சிஸ் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தவிர, வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி சமூக நலக்கூடம், தடாகம் ரோடு ஜிசிடி கல்லூரி ஆகிய 4 இடங்களில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தன.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் கரோனா பரிசோதனைக்கு வருபவா்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதைத் தொடா்ந்து புனித பிரான்சிஸ் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா பரிசோதனை மையம் வியாழக்கிழமை மூடப்பட்டது. இதற்கு பதிலாக கோவை அரசு கலைக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.