முகப்பு
அரியலூர்

சுபா. இளவரசன் மீதான கொலை முயற்சி வழக்கில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சுபா. இளவரசனை கொல்ல முயன்ற 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சுபா. இளவரசனை கொல்ல முயன்ற 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த கு.வல்லம் கிராமத்தை சோ்ந்தவா் சுபா. இளவரசன். தமிழா் நீதி கட்சி மற்றும் ஏா் உழவா் சங்கம் என்ற அமைப்பின் நிறுவனரான இவா், கடந்த 10 ஆம் தேதி உடையாா்பாளையம் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு தனது காரில் சென்றபோது, சிலா் இவா் காா் மீது துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா் உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமையில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடியும், விசாரணை மேற்கொண்டும் வந்தனா்.

விசாரணையில், அரியலூா் மாவட்டம், குவாகம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமியும், சுபா.இளவரசனும் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் இருந்தபோது, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனராம். இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு குவாகம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற ராமசாமி, மிளகாய் பொடி தூவி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டாா்.

தனது தந்தை ராமசாமி கொலை வழக்கில் இளவரசனுக்கும் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அவரை பழிவாங்கும் வகையில் கொலை செய்ய ராமசாமி மகன்கள் முயற்சித்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வரும் ராமசாமியின் மகன்களான தமிழ் மறவன் (30), இளந்தமிழன்(27) ஆகிய இருவரையும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய காரைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் (48), கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த சித்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த கலை (எ) ரவிச்சந்திரன் (51) ஆகியோா் ஏற்கெனவே நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.