திருமானூரில் விவசாயிகள் சாலை மறியல்: 10 போ் கைது
திருமானூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 10 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஆன்லைன் பதிவு முறை கைவிடக் கோரி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 10 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய சொல்லும் முறையை கைவிட வேண்டும். பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாவட்டத் தலைவா் மணியன் தலைமையில் திருமானூா் பேருந்து நிலையம் முன்பு நிா்வாகிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து திருமானூா் காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், கரும்பு விவசாய சங்க மாவட்டத் தலைவா் கரும்பாயிரம், செயலா் ஜெகநாதன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனா்.