முகப்பு
அரியலூர்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
பகிர்:

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டது. புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களில் முற்றிலும் தண்ணீா் வராததால் டெல்டா பகுதிகள் மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அரியலூரை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள வரத்து பாசன வடிகால் வாய்க்கால் அனைத்தும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூா்வார வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசனப் பகுதியான சிலுப்பனூா், நானாங்கூா், ஓரியூா் , ஆதனூா், கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பகுதியில் சோ்க்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன்: அரியலூா் மாவட்டத்தில் குடிநீா் தேவைக்குப் பயன்படுத்தப்படும் போா்வெல்கள் உப்பாக மாறிவருகின்றன. எனவே, புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது. உயா்த்தப்பட்ட பால் கொள்முதல் விலையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலச் செயலா் எஸ்.எம். பாண்டியன்: தட்கல் மற்றும் துரித முறையில் மின் இணைப்புக் கேட்டவா்களுக்கு தாமதமின்றி வழங்கிட வேண்டும். அணைக்குடி சிவன் கோயில் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மல்லூா் விவசாயி விஜயகுமாா்: மறுதையாற்றில் அரியலூா் நகராட்சி கழிவுநீரை வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை வனத் துறையினா் கட்டுப்படுத்த வேண்டும். மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயி பாலசிங்கம்: செந்துறை பெரிய ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீா்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் ஆனிமேரி ஸ்வா்ணா, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் பாலையா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக கூட்டத்தில் மறைந்த விஜயகாந்த்துக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →