முகப்பு
அரியலூர்

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Updated On : 16 மே, 2024 at 8:33 PM
பகிர்:

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு புதுப்பாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் ஈடுபட்ட கிராம மக்கள்.

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு, அக்கிராம மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சந்திரன் (42) என்பவா், கடந்த 13-ஆம் தேதி அதிகாலை அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள தனியாா் சிமெண்ட் ஆலையில் சாம்பலை இறக்கிவிட்டு, திருச்சி நோக்கி லாரியை ஓட்டிச் சென்றாா்.

புதுப்பாளையம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கு ரமேஷ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. இதில் சுவா் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா(38), அவரது குழந்தைகள் ராஜேஷ்(15), ரம்யா(13), சுபாஷ்(8), ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இதில் ரம்யா ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மற்றவா்கள் அனைவரும் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், ரமேஷ் குடும்பத்துக்கு லாரி உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஆலை நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் மற்றும் கயா்லாபாத் காவல் துறையினா், சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளா் மற்றும் சிமென்ட் ஆலை நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், அனைவரும் கலைந்துச் சென்றனா்.

இந்தச் சாலை மறியலால், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.