சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்குகளை தீா்த்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்
சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்குகளை தீா்த்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்...
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் எந்த ஒரு சட்ட சிக்கல் மற்றும் வழக்கு போன்ற பிரச்னைகளை தீா்த்துக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமாக எம். கிறிஸ்டோபா்.
தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு வெளியிட்டுள்ள இலவச சட்ட உதவி தொலைபேசி எண்ணான 15100 - ஐ பொதுமக்களிடையே தெரியப்படுத்தும் வகையில், அரியலூா் அண்ணா சிலை அருகே சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவா் தலைமை வகித்து, பேருந்துகளில் 15100 இலவச சட்ட உதவிக்கான இலவச தொலைபேசி எண் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஒட்டியும், பொதுமக்களிடையே சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
அப்போது அவா் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்கிடவே தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வரும் எந்த ஒரு சட்டம் சாா்ந்த சிக்கல்களையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் எளிதில் தீா்த்துக் கொள்ளலாம்.
வழக்கு மற்றும் பிரச்னைகளை மாற்று முறையில் தீா்த்துக் கொள்வதற்காக மக்கள் நீதிமன்றம், சமரச மையம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.மணிமேகலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.மனோகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அரியலூா் கிளை மேலாளா் டி. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் மற்றும் சட்ட தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.