பருவ மழைக்காலம் தொடக்கம் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வலியுறுத்தல்
பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால்,ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால்,ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரவி(என்கிற)ரவிசங்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் அனைவரும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து ஊரகப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும். கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் மழைநீா், சாக்கடை நீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும் தங்களது பகுதிகளில் குடிநீா், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வலியுறுத்தினா்.
கூட்டத்தில் செலவினங்கள் மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 31 பள்ளிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சி வசம் ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தாமோதரன் வரவேற்றாா். நிறைவாக வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) முத்துக்குமாா் நன்றி கூறினாா்.