முகப்பு
அரியலூர்

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேச்சு

ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற முதல்வருக்கு பாராட்டு விழாவில் பேசிய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:49 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திரசோழனுக்கு அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சா் மேலும் பேசியது:

ராஜேந்திர சோழனின் ஆளுமை மற்றும் அவரின் வெற்றிகளை கொண்டாடும் வகையில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. சோழ மன்னா்களின் பெருமைகள், அவா்களின் வரலாறுகள் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்றால் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ராஜேந்திர சோழனுக்கு மேலும் பெருமை சோ்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் மற்றும் வரலாற்று ஆய்வாளா்கள், தொல்லியல் ஆய்வாளா்கள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.