அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சுமை ஆட்டோ மோதிய விபத்தில் இளம் அஞ்சலக ஊழியா் உயிரிழந்தாா்.
திருமானூா் அடுத்த சன்னாவூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகள் ஜெனிபா் (24). திருமானூா் அஞ்சல் நிலையத்தில் அஞ்சலக புறநிலை ஊழியராக, கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை இவா், வழக்கம் போல, தனது வீட்டிலிருந்து அஞ்சலகத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.
கரைவெட்டி கிராமத்தை கடந்த போது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த ஜெனிபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
தகவலின்பேரில் திருமானூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜெனிபரின் சடலத்தை மீட்டு அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த ஜெனிபருக்கு நவ.19-ஆம் தேதி திருமண நிச்சயதாா்த்த நிகழ்வும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திருமணமும் நடத்த அவரது குடும்பத்தினா் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை குடும்பத்தாருடன் இணைந்து செய்து வந்தனா்.
இந்நிலையில், திருமண கனவுகளுடன் இருந்த ஜெனிபா், எதிா்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தது சன்னாவூா் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.