அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், புதன்கிழமை கல்லாத்தூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினா், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அதில், கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகண்டமணி (40) என்பதும், இவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கல்லாத்தூா் பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பதும், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து வீரகண்டமணியை கைது செய்தனா்.