அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ராயம்புரம், இலுப்பையூா், பொய்யாதநல்லூா், தாமரைக்குளம், அரியலூா் சத்யா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த அவா், பின்னா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் , ஊராட்சிகள், பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் , தற்போதைய நிலை, முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை , உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் க. சாய்நந்தினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.